internet

img

ஆபத்தானதா ஆன்லைன் விளையாட்டுகள்?

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு, நாம் சந்திக்கும் மிக முக்கியமான சவால்களில் ஒன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆன்லைனில் செலவிடும் அளவுக்கதிகமான நேரம். பொதுமுடக்கத்திற்கு முன்பே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆன்லைன் விளையாட்டு காரணமாக நிகழ்ந்த தற்கொலைகள், கொலைகள், இப்பொழுது அன்றாட செய்தியாக நம்மை ஆட்டுவிக்கிறது. நம் வீட்டில், பயணம் செய்யும் பேருந்துகளில், மின்சார  தொடர் வண்டிகளில் என எங்கேயாவது காத்திருக்கும் நேரத்தில், நம் கைபேசி பார்த்து போரடித்து வேடிக்கை பார்த்தால், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெரியவர்கள் என்று எல்லோரும் ஏதோ ஒரு ஆன்லைன் திரையில் திளைத்திருப்பதை பார்க்கும் போது மனது “பக்” என்கிறது. எல்லோரும் தனிமைப்பட்டிருக்கும் போது நம்மை இணைத்த ஆன்லைன், இப்பொழுது நம்மை ஆண்டு கொண்டி ருக்கிறதோ என்ற ஐயம் தோன்றுகிறது.

ஆபத்தாகும் ஆன்லைன் விளையாட்டுகள்
விளையாட்டு நல்லதுதான். அது மகிழ்ச்சி தரவல்லது. குறிப்பாக வளர் இளம் பருவத்தினர் போட்டி போடுவதில் உள்ள சாகச உணர்வு, அதற்காக பாராட்டு பரிசு பெறுவதில் உள்ள ஆர்வம், சமூக வயப்படுதல், நண்பர்களுடன் இணைந்து விளையாடுவது போன்ற பல்வேறு ஆரோக்கியமான, தேவையான விஷயங்களை உள்ளடக்கியது. இத்தகைய உணர்வுகளுக்கு தீனி போடுவதாக உள்ளது ஆன்லைன் விளையாட்டுகள். இந்த  விளையாட்டுகளில் உள்ள பரிசளிக்கும் அம்சங்கள், நம் மூளையில் டோபமைனை உண்டு செய்கிறது, ஒரு உற்சாகத்தை உடம்பு முழுவதும் படரச் செய்கிறது.  இந்த டோபமைனை மேலும் மேலும் விரும்பும் நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அடிமைப்பட்டு விடுகிறது. ஆன்லைன் விளையாட்டுக்களின் ரிவார்டு  சிஸ்டம், பலரை அந்த விளையாட்டிற்கு அடிமைப்படுத்தி விடுகிறது. குறிப்பாக ரம்மி போன்ற கேம்ப்லிங் விளை யாட்டுக்கள் (சூதாட்டம்) முதலில் சிறிய வெற்றிகளாய் உற்சாகம் தருகின்றன. அந்த உற்சாகம் மீண்டும் மீண்டும் தேவைப்படுவதால், அதில் சிக்கிக் கொள்கின்றனர். அதற்காக மேலும் மேலும் பணம் தேவைப்படும்போது பொய் சொல்லத் தொடங்குகின்றனர். குடும்பத்தினரிடம், நண்பர்களிடம் வேஷம், தொடர்கிறது. சமாளிக்க முடியாத நிலை வரும்போது, தன் மீதோ, மற்றவர்கள் மீதோ வன்முறை நிகழ்த்தி அந்த உற்சாகத்தை பெற முயல்கின்றனர்.

விளையாட்டு வினையாக
சூதாட்டம் இல்லாத விளையாட்டுக்களில், வெற்றிகள் இந்த போதையை தருகின்றன. வன்முறையை விளை யாட்டுக்கள் நார்மலைஸ் செய்கின்றன. உதாரணமாக சுட்டுக் கொல்லுதல், காயப்படுத்துதல், உடலுறவு கொள்தல் ஆகியவற்றை சில விளையாட்டுக்கள் வெற்றிக் கான வழியாக வைக்கின்றன. சில ஆன்லைன் கேம்கள் ரியல் லைஃப் சேலஞ்சுகளையும் முன்வைக்கின்றன. விளையாடுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் உலகிற்கும், நிஜ உலகிற்கும் வித்தியாசம் இழந்து விடுகின்றனர். போனை பிடுங்கினால் கோபம், விளை யாடாவிட்டால் பதட்டம், எரிச்சல், குடும்பம், நண்பர்களிட மிருந்து விலகியிருத்தல்; செய்ய வேண்டிய கடமைகளை  செய்யாமல் தவிர்ப்பது, உதாரணமாக, உடம்பு சரியில்லை என்று பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைனில் விளையாடுவது, பெரியவர்கள் என்றால் வேலைக்கு செல்வதை தவிர்ப்பது, சாப்பிட வராமல் ஆன்லைனில் விளையாடுவது, தூக்கமின்மை (தூங்காமல் விளையாடுவதால்), குளிக்காமல் இருப்பது, நண்பர்கள் கூப்பிட்டால்கூட பேசாமல் இருப்பது, வேறு ஏதேனும் உணர்வை மறைக்க (உதாரணமாக மார்க் குறைந்தால், வீட்டில் திட்டினால், வீட்டில் வேறு ஏதேனும் பிரச்னை இருப்பின்) ஆன்லைன் விளையாட்டில் நேரம் செலவழிப்பது, இதெல்லாம் விளையாட்டு வினையாக மாறிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள். இப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனே மனநல ஆலோசகர், மனநல மருத்துவர்களின் ஆலோ சனை பெறலாம். ஐ.சி.டி (10), டி.எஸ்.எம் (5), இவற்றில் கேமிங் டிஸார்டர் என்று சில அறிகுறிகளைச் சொல்லி, அதை ஒரு மன நோயாக வகைப்படுத்தி யுள்ளனர். டி.எஸ்.எம். (5) இல் இதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஆராய வேண்டும் என்று வகைப்படுத்தியுள்ளனர்.

நாம் என்ன செய்ய வேண்டும்?
ஆன்லைன் கேம் விளையாடினாலும் சமூக வாழ்க்கை  கெடாதவாறு இருப்பின், அதாவது, குடும்பத்தினரிடம் நேரம் செலவிடுவது, சாப்பாடு, தூக்கம் தேவையான அளவில் இருப்பது, எரிச்சல் இல்லாமல், பொய் சொல்லா மல், பண இழப்பு இல்லாமல் இருப்பது, கடமைகளை சரியாக செய்வது, (பள்ளி, கல்லூரி, அலுவலகம்), அதற்கென சரியான நேரம் ஒதுக்குவது, நண்பர்களுடன் கூடிப் பேசி, விளையாட நேரம் ஒதுக்குவது, பிற பொழுது போக்குக்கும் நேரம் ஒதுக்குவது, போன்றவை இருப்பின் கவலை வேண்டாம். ஆனால் எப்பொழுதும் ஆன்லைன் விளையாட்டி லேயே முழுகி இருப்பது, விளையாடாத பொழுதும் அது பற்றிய கற்பனை, பேச்சிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொள்வது, எரிச்சல், பதட்டம், ஓய்வில்லாத்தன்மை, (விளையாடாத பொழுது) குடும்ப, சமூக உறவுகளிடம் நாட்டமில்லாமல் இருப்பது, உண்மை தன்னிலையை விட தன்னுடைய ஆன்லைன் அவதாரமாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்வது, கடமைகளை (ஹோம்வொர்க், படிப்பது, பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வது) சரியாக செய்யாமல் இருப்பது, தன் சுத்தம், நலம் பேணா மல் இருப்பது (குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது – இவற்றில் சுணக்கம்) இது போன்ற அறிகுறிகள் தென்பட் டால், மன நல ஆலோசகர், மன நல மருத்துவர் உதவியை நாட வேண்டும். எல்லோருக்கும் இது வினையாகும் என்பதை விட,  ஏற்கனவே மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு சோக நிகழ்வால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தில், சமூகத்தில் தனக்கான இடம் இல்லை என்ற சோகம், கோபத்தில் இருப்பவர்கள், ரிவார்டிங் சிஸ்டத்தினால் எளிதில் தூண்டப்படக் கூடியவர்கள், (அதிக மகிழ்ச்சி, அதிக சோகம் எளிதில் அடையக் கூடியவர்கள்), இத்தகைய குண நலன்கள் உடையவர்கள், எளிதில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகக் கூடும்.

எப்படி தவிர்க்கலாம்?
குடும்பத்தில் எல்லோருக்கும் திரை நேரக் கட்டுப்பாடு  விதிக்கலாம். குடும்பத்தினர், பெற்றோர், குழந்தைகளிடம், குடும்ப உறுப்பினர்களிடம் உரையாட அதிக நேரம் செலவிடலாம், அதில் எல்லோருக்கும் கவனம் கொடுத்து,  எல்லோர் கருத்துக்கும் மதிப்பு அளித்து கேட்கலாம். நாமும் சேர்ந்து விளையாடும் பொழுது (குறிப்பிட்ட நேரம்), என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து, வளர் இளம்  பருவத்தினரை புரிந்து கொண்டு, அவர்கள் மகிழ்ச்சியில்  பங்கு கொள்ளலாம். அவர்கள் எரிச்சல், கோபம் வெளிப் படுத்தும் போது, பொறுமையுடன், எதிர்கொண்டு, மாற்று சாகச விளையாட்டுகள், டிரெக்கிங் போன்றவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறு செய்யலாம். கருத்து ரீதியான அவர்களின் எதிர்மறை எண்ணங் களை அறிந்து, மதிப்புக் கொடுத்து, நேர்மறை எண்ணங் களை கருத்துக்களை விதைக்கலாம். அவர்கள் மாறுவதற்கு கால அவகாசம் கொடுத்து, பொறுமையுடன், கண்டிப்புடன் மேற்கூறிய அனைத்தை யும் பின்பற்றலாம். தொடர்புக்கு: vergalnalini@gmail.com

-நளினி கங்காதுரை
உளவியல் ஆலோசகர்